இது சுக்கி ஜோசப் பிரேம்நாத் எழுதிய “Restorer” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.
பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்
அப்பொழுது அவர் தோமாவை நோக்கி: “உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார். யோவான் 20:27
தோமா, இயேசுவின் உயிர்த்தெழுதலைச் சந்தேகப்பட்ட சீடர். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின், ஆணிகளால் துளைக்கப்பட்ட கைகளிலும், விலாவிலுள்ள காயத்திலும் தான் தன் கையைப் போட்டாலொழிய இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்று தான் நம்ப மாட்டேன் என்றார். அவருடைய இந்த வார்த்தைகள் அவருக்கு சந்தேகப்படும் தோமா”என்ற பெயரைப் பெற்றுத் தந்தன. உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவரை விட்டுவிடவில்லை, அதற்குப் பதிலாக, இயேசு மற்ற சீஷர்களுடன் கூடிவந்திருந்த இடத்தில் அவரைச் சந்தித்து, தம்முடைய கைகளையும்விலாவையும் சோதித்துப் பார்த்து விசுவாசிக்கும்படி அவருக்கு அனுமதி அளித்தார். விசுவாசத்தின் மீட்பராகிய இயேசு தோமாவைத் தம்மிடமாக மீட்டெடுத்தார், அவருடைய சந்தேகத்தின் போதும் அவருக்குத் துணையாய் நின்றார். அந்தச் சீடர் உடனடியாக விசுவாசித்தார். அவருடைய விசுவாசம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டதால், அவர் தனக்குத் தெரிந்த நாட்டின் சுகத்தை விட்டுவிட்டு, ஒரு அயல்நாட்டிற்கு, அதாவது இந்தியாவுக்கு பயணம் செய்தார். அவர் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்கண்ட சாட்சியாகப் பார்த்தவர், உயிர்த்தெழுதலின் செய்தியைத் தனக்குள்ளேயே வைத்திருக்க முடியவில்லை. அவர் இந்தியாவிற்குப் பயணம் செய்து, கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தியை அங்கிருந்த மக்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் சென்று, இயேசுவின் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டார் என்று நம்பப்படுகிறது, இறுதியில் அவர் தற்போதைய இந்தியாவில் உள்ள சென்னை, புனித தோமையர் மலையில்( St. Thomas Mount)வேதசாட்சியாக (martyred) மரித்தார். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன், அவர் என் வசிப்பிடத்திற்கு அருகில் (என் வீட்டிலிருந்து 4 மைல் தொலைவில்) வேதசாட்சியாக மரித்தார். அவர் நடந்த பாதையில்தான் நான் அடிக்கடி நடக்கிறேன் என்று நினைப்பதுண்டு. ஒரு மனிதனைத் தனக்குத் தெரியாத ஒரு நாட்டில் வேதசாட்சியாக மரிக்கத் தூண்டியது எது?மரணத்தையும் அவரையும் ஜெயித்த தம் இரட்சகரின் மீட்டெடுக்கப்பட்ட அன்பு மட்டுமே அதற்கு உந்துதலாக இருந்தது. உயிர்த்தெழுந்த கிறிஸ்து இன்றும் அதே போலவே இருக்கிறார். நம்முடைய சந்தேகத்தின்தருணங்களிலும்கூட அவர் நம் பக்கத்தில் நிற்கிறார். சந்தேகமானதுஉங்களை அவரைவிட்டுத் திரும்பிச் செல்ல வைக்காமல், மாறாக, அவரை இன்னும் நெருங்கிச் சென்று கேட்கும்படி தூண்டட்டும், அவர் உண்மையுள்ளவர்.
குறிப்பு: தோமா வேதசாட்சியாக மரித்த புனித தோமையர் மலை, உண்மையில் நான் வளர்ந்த இந்தியாவில் உள்ள சென்னையின் அருகில் உள்ளது. உங்களால் அங்கு சென்று வர முடிந்தால், அது ஒரு ஆழமான அனுபவமாக இருக்கும்.

