சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய 'The Wedding' ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.

எனக்கு அரச குடும்பத் திருமணங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய திருமணங்களில் ஒரு கம்பீரமும், காதலும், அழகும் கலந்திருக்கும். ஓர் அரச குடும்பத் திருமணத்தின் அடிப்படையில் இந்த ஓவியத்தை உருவாக்க வேண்டுமென்று தீர்மானித்து, காதலர் தினத்தன்று இதை வரைய வேண்டும் என்று மிகவும் ஆர்வமாய் இருந்தேன், ஏனென்றால் —அது இன்னும் காதல் நிறைந்ததாக உணரச் செய்தது!
காதலர் தினத்தன்று, நான் சங்கீதப் புத்தகத்தை எதேச்சையாக வாசித்துக் கொண்டிருந்தபோது, சங்கீதம் 45-ஐ அடைந்தேன். இதற்கு முன்பு பலமுறை இந்த அதிகாரத்தை நான் வாசித்திருக்கிறேன், ஆனால் ஆழமாகச் சிந்தித்தது கிடையாது. இந்த முறை அது வித்தியாசமாக இருந்தது. நான் இதற்கு முன்பு அறியாத காரியங்களைபரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார். என்னுடைய பெரும்பாலான ஓவியங்கள் இத்தகைய தெய்வீக வெளிப்பாடுகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. பரிசுத்த வேதாகமத்தைப் புரிந்துகொள்ள நான் இறையியல் கல்லூரிக்கு (Seminary) செல்லவில்லை; மாறாக, அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டையே நான் நம்பியிருக்கிறேன். என் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான வேகத்தில், எனக்குக் கற்றுக்கொடுப்பதில்அவர் எப்போதும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
சங்கீதம் 45-ஐ வாசிக்கத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நான் உணர்ந்தேன். என் ஆத்துமா மகிழ்ந்து,துதியினால் நிரம்பி வழிந்தது. அந்த வார்த்தைகள் எவ்வளவு அழகாகவும், வல்லமையாகவும் இருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பான அனுபவம்; விளக்க முடியாத ஒரு தெய்வீக மகிழ்ச்சியால் என் இதயம் வேகமாகத் துடித்தது. அந்த மகிழ்ச்சி என்னை ஒரு ஆர்வத்துடன் செயல்படத் தூண்டியது. நான் தொடர்ந்து வாசித்தபோது, பழைய ஏற்பாட்டில் உள்ள இந்த சங்கீதம், புதிய ஏற்பாட்டில் உள்ள "ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணத்தை" எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது என்பதை உணர்ந்தேன். நான் அதை ஓவியமாக வரைய வேண்டும் என்று உறுதியாக அறிந்தேன், அதைச் செய்யும் வரை என்னால் ஓய்ந்து இருக்க முடியவில்லை.
இந்த ஓவியம் சங்கீதம் 45-ன் காட்சி வெளிப்பாடாகும். அந்த அதிகாரம் இந்த வார்த்தைகளுடன் தொடங்குகிறது: "என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி." (சங்கீதம் 45:1). நான் உணர்ந்ததும் அதுவே—ஆனால் நான் பேனாவுக்குப் பதிலாகத் தூரிகையைப் (paint brush) பயன்படுத்தினேன்.நாம் வாசிக்கும்போது, ராஜாவையும் அவருடைய திருமணத்தையும் காண்கிறோம். இந்த ராஜா மற்றவர்களைப் போன்றவர் அல்ல. அவர் மிகவும் அழகானவர், அவருடைய உதடுகளிலிருந்து கிருபையுள்ள வார்த்தைகள் வழிகின்றன. அவர் சத்தியத்தையும், சாந்தத்தையும், நீதியையும் நிலைநிறுத்துகிறார். அவர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறார், தேவன் தாமே அவரை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்திருக்கிறார். இது பலத்தினாலும் அதிகாரத்தினாலும் நிலைநிறுத்தப்படும் ஒரு பூமிக்குரிய ராஜாவைப் போலத் தெரியவில்லை. இந்த ராஜா வித்தியாசமானவர்: கிருபையும் நீதியுள்ளவர்.அவருடைய ராணி, அதாவது மணமகள், அழகானவள். அவள் ஓப்பீரின் தங்கம் போன்ற மிகச்சிறந்த தங்கத்தினாலான ஆபரணங்களை அணிந்து, பொன் கிரீடத்துடன் மகிமையாகத் தோன்றுகிறாள். அவளுடைய தோழிகளும் அரச வம்சத்தினர், அவர்கள் அவளை ராஜாவினிடத்தில் மகிமையான ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள். இந்தக் சங்கீதத்தில் எனக்குப் பிடித்த வரிகள்;"அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார் ;“ - சங்கீதம் 45:11. இது எவ்வளவு அழகானது?
இது வெறும் மற்றொரு அரச குடும்பத் திருமணமா, அல்லது இந்தக் கதையில் இன்னும் ஏதேனும் இருக்கிறதா? புதிய ஏற்பாட்டின் மூலம், இயேசுவே ராஜாதி ராஜா என்றும் அவரே மணவாளன் என்றும் நாம் காண்கிறோம். அவருடைய மணமகள் திருச்சபை. உங்கள் திருச்சபை அல்லது எனது திருச்சபை மட்டுமல்ல, உலகளாவிய திருச்சபை—பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் ஒன்றிணைக்கப்பட்ட ஒரே சரீரம்.
மணவாளனாகிய இயேசு இப்போதும் தனது மணமகளில் பிரியப்படுகிறார். மணமகள் இன்னும் பூரணமடையவில்லை; அவளுடைய திருமண உடையில் உள்ள கரைகளையும், சுருக்கங்களையும் நாம் அடிக்கடி காண்கிறோம். மணமகள் எப்போதும் "மணமகளுக்குரிய" குணங்களை வெளிப்படுத்துவதில்லை என்பதையும் நாம் காண்கிறோம். ஆயினும், கிறிஸ்துவின் முடிவடைந்த கிரியையை நம்பும் ஒவ்வொரு நபரும் அந்த மணமகளின் அங்கமே. நாமே அந்தத் திருச்சபை.தனிப்பட்ட முறையில், நாம் அரசவைக்குச் சொந்தமான மணப்பெண் தோழிகளாகவும் (Bridesmaids) இருக்கிறோம். ஒரு நல்ல தோழியாக இருப்பது நமது கடமை. மணமகளைக் கவனித்துக்கொள்வதும், திருமண நாளுக்காக அவளைச் சிறந்த முறையில் தயார்படுத்துவதும் ஒரு தோழியின் பணியாகும். நாம் அவளுடைய ஆடையைச் சரிசெய்து, கிரீடத்தைச் சீரமைத்து, அவளுடைய ஆபரணங்களை அணிய உதவி செய்து, அவளை மணவாளனிடம் அழைத்துச் செல்கிறோம்.தோழிகளாகிய நாம் அதை சீராக செய்கிறோமா, அல்லது மணமகள் தனது சிறந்த நிலையை அடைவதைத் தடுக்கிறோமா? ஆட்டுக்குட்டியானவரின் திருமண நாளுக்கு நமது இருதயம் தயாராக இருக்கிறதா? நமது ராஜரீக மணவாளன் தயாராக இருக்கிறார், ஆனால் மணமகள் இன்னும் தயாராகவில்லை. நமது ஆயத்தத்தின் மூலம் அந்த நாளின் வருகையை நாம் விரைவுபடுத்துவோமா?
இந்த ஓவியத்தைப் புகைப்படம் எடுக்கும்போது எனது சொந்த திருமண நாளிலிருந்து சில பொருட்களைப் பயன்படுத்தினேன்: எனது முகத்திரை (Veil), கிரீடம் (Tiara) மற்றும் திருமண மோதிரங்கள். அவை அடையாளப்பூர்வமாக வரப்போகும் திருமணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. நமது ராஜரீக மணவாளன் தனது மணமகளின் மேல் பிரியமாக இருக்கிறார் என்பதை நினைவூட்டவே அந்தச் சிவப்பு ரோஜா அங்கே இருக்கிறது. திருமண நாளுக்காக அவருடைய அன்பு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.




