Tamil Post: Tamil

தெருக்களில் தேவதூதர்கள்

தெருக்களில் தேவதூதர்கள்

சகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ( Angels in the Street) ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.

​அநேக நேரங்களில் நான் வாழும் நகரத்திற்காக , தேசத்திற்காக மற்றும் இந்த உலகத்திற்காக ஜெபிப்பது எனக்கு ஒரு போராட்டமாகவே தான் இருந்தது. வன்முறை, போர், பிரிவினை மற்றும் அமைதியின்மை ஆகியவற்றைக் காணும்போது, "தன் அறையில் அமர்ந்திருக்கும் ஒரு சாதாரண மனிதனின் ஜெபம் எதை மாற்றிவிடப் போகிறது?" என்று நான் அடிக்கடி வியந்ததுண்டு.

​ஒரு நாள் ஆண்டவர் என்னிடம்: "உன் ஜெபம் வெறும் வெற்றிடத்தில் வீசப்படும் வார்த்தைகள் அல்ல. வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரானவரை நோக்கி நீ உன் ஜெபங்களைத் திருப்பும்போது, அவை பெரிய காரியங்களைச் சாதிக்கும். பெரிய காரியங்களைக் கேட்கத் தயங்காதே, ஏனென்றால் நானே வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர் (I AM)."என்று சொன்னார்.

எனக்கு மிஞ்சிய மற்றும் என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பெரிய காரியங்களுக்காக ஜெபிப்பதற்கு அது என்னை அதிகமாக  ஊக்கப்படுத்தியது.   நம்மைச் சுற்றிலும் சில குரல்கள்,நாம் எவ்வளவு பாவம் செய்திருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டி, இது போன்ற ஜெபங்களைச் செய்ய நாம் தகுதியற்றவர்கள் என்று நம்மைச் சிறுமைப்படுத்த முயற்சிக்கும்.ஆனால் இயேசு சிலுவையில் செய்த தியாகபூர்வமான மரணம், நாம் தைரியமாக அவருடைய சமூகத்தில் பிரவேசிக்க நம்மை உற்ச்சாகப்படுத்த வேண்டும். அதுவே கிருபை.

​ஒரு நாள் நகரம், நாடு மற்றும் உலகத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் பரலோகத்திலிருந்து இறங்கி நகரத்தின் தெருக்களில் ஊடுருவிச் செல்லும் ஒரு காட்சியை நான் கண்டேன். அது மிகவும் அழகாகவும் வல்லமையாகவும் இருந்தது! அந்தத் தரிசனமே இந்த மென்மையான பாஸ்டல் (soft pastel) ஓவியத்திற்கு உந்துதலாக அமைந்தது.

​இயல்பான கண்களுக்கு நாம் குழப்பத்தையே காண்கிறோம், ஆனால் அவருடைய நாமத்தினால் அழைக்கப்படும் மக்கள் பிதாவின் இருதயத்தோடு இணைந்து பெரிய காரியங்களுக்காக ஜெபிக்கும்போது, பரலோகம் அசைக்கப்படும், இருள் அகற்றப்படும். நமது சுயநல ஆசைகள் மற்றும் அகந்தையினால் நாம் ஏற்படுத்திய சேதங்கள் சீர்செய்யப்படும். தேவன் குணமாக்குவார், மீட்டெடுப்பார் மற்றும் உயிர்ப்பிப்பார்.

Angels In the Street - சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

​இடைவிடாமல் ஜெபியுங்கள். அவருடைய ராஜ்யம் வருவதாக. அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக.

​"தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.." — எபிரெயர் 1:7

​"அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.

அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்." — 2 ராஜாக்கள் 6:16-17

​அன்புள்ள தேவனே,

நீர் ஒரு பெரிய தேவன் என்பதால், நான் தைரியமாக உமது சமூகத்தில் வந்து பெரிய காரியங்களுக்காக ஜெபிக்கிறேன். பிதாவே, உடைந்த உள்ளங்களைக் குணமாக்கும், பலவீனமானவர்களைப் பாதுகாத்தருளும், உலக நாடுகள் அனைத்தையும் ஆசீர்வதியும். ஒவ்வொரு சங்கிலியையும் உடைக்கவும், அரண்களைத் தகர்க்கவும், இருளைப் போக்கவும் உமது தூதர்களை அனுப்பும்.

இயேசுவின் நாமத்தில், ஆமென்.

யெகோவா சித்கேனு

சகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ( Jehovah Tsidkenu) ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

நான் ​ஒரு மாதம் ஓவியம் வரையாமல் இருந்த பிறகு, தேவனிடமிருந்து ஒரு செய்தியைப் பெறவும், உந்துதல் அடையவும் வேதாகமத்தைத் திறந்தேன். நான் முதலில் வாசித்த வசனம் ஏசாயா 11:1,​"ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிப் பலன் தரும்." (இது கி.மு. 740 முதல் 701-க்குள் எழுதப்பட்டது). பிறகு, நான் எதேச்சையாகப் பக்கங்களைத் திருப்பியபோது எரேமியா 23:5-6 வசனங்கள் என் கவனத்தை ஈர்த்தன, "இதோ, நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆண்டு, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்... அவருக்கு இடப்படும் நாமம்: 'கர்த்தர் நமது நீதி' என்பதே." (இது கி.மு. 626 முதல் 587-க்குள் எழுதப்பட்டது).​இவைகள் இரு வேறு தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட ஒரே மாதிரியான செய்திகள் ஆகும். இதைக் குறித்து நான் தியானித்து, இதை ஓவியமாக வரையத் தீர்மானித்தேன்.

யெகோவா சித்கேனு (Jehovah Tsidkenu) சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

இந்த ஓவியத்தின் தலைப்பு "யெகோவா சித்கேனு"(Jehovah tsidkenu -எபிரேய மொழி)- கர்த்தர் நமது நீதி என்பது, நாம் செய்யும் நற்கிரியைகளோ, தர்மங்களோ, மதச் சடங்குகளோ, உபவாசமோ அல்லது விசேஷ நாட்களைக் கடைப்பிடிப்பதோ நமது நீதி அல்ல. கர்த்தரே நமது நீதி என்று தேவன் கூறுகிறார்.​யார் இந்த கர்த்தர்? இந்த கர்த்தர் ஈசாயின் (தாவீது ராஜாவின் தந்தை) அடிமரத்திலிருந்து வந்த ஒரு துளிர். இவர் தாவீதின் ஒரு கிளை. தாவீது இஸ்ரவேலின் மிக முக்கியமான ராஜா, அவர் கி.மு. 1010 முதல் 970 வரை பண்டைய இஸ்ரவேலை ஆண்டார். கி.மு.500 வாக்கில் இஸ்ரவேல் அசீரியர்களாலும் பாபிலோனியர்களாலும் கைப்பற்றப்பட்ட போதிலும், தாவீது ராஜாவின் வம்சாவளியிலிருந்து மேசியாவை எழும்பப்பண்ணுவதாக தேவன் வாக்குறுதி அளித்தார். அந்த மேசியா ஒரு சிங்கத்தைப் போல வராமல், ஒரு பட்டுப்போன மரத்திலிருந்து வரும் சிறிய துளிரைப் போல வருவார். இந்த மேசியாவே நம்முடைய கர்த்தராக இருப்பார்.​கர்த்தர் என்றால் எஜமான் அல்லது ராஜா என்று பொருள். இந்த ராஜா நீதியாக ஆட்சி செய்வார். அவரே நமக்கு நீதியாக இருப்பார். தாவீது ராஜாவின் ஆட்சிக்கு 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்தார். அவர் மூலம் நாம் நீதிமான்களாகிறோம். விசுவாசத்தின் மூலம் நாம் அவருடைய நீதியைப் பெறுகிறோம். சிலுவையில் அறையப்பட்ட மேசியாவின் மூலம் கிருபை ஊற்றப்படுகிறது, இது தேவனுடைய பார்வையில் நம்மை நீதிமான்களாக்குகிறது.​இந்த நீதியைப் பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்வது பெரும்பாலும் கடினமாக இருக்கலாம், ஆனால் வரலாறு முழுவதும் தேவன் தனது பல்வேறு தீர்க்கதரிசிகள் மூலம் இதே செய்தியை நமக்குக் கொடுத்துள்ளார். இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். விடுதலையோடு வாழுங்கள். நமது கடந்த காலத் தோல்விகள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், கர்த்தரே நமது நீதி. யெகோவா சித்கேனு.

எனது முதல் அற்புதம்

​சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

அற்புதங்கள் என்பது நமது சாதாரண வாழ்க்கையில் தேவனுடைய வல்லமை குறுக்கிட்டு, ஏதோ ஒரு காரியத்தை நன்மையாக மாற்றுவதாகும். எனக்கு நினைவிருக்கும் முதல் உண்மையான அற்புதம் நான் 4-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்தது.​நான் 4-ஆம் வகுப்பு படிக்கும்போது, டைபாய்டு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். என்னால் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ முடியவில்லை, நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அடுத்த வகுப்புக்குச் செல்வதற்கான இறுதித் தேர்வுகளைக் கூட என்னால் எழுத முடியவில்லை. எனது முந்தைய தேர்வுகளின் அடிப்படையில், இறுதித் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குச் செல்ல பள்ளி நிர்வாகம் சிறப்பு அனுமதி அளித்தது. நான் எலும்பும் தோலுமாக இருந்தேன், எதையும் சாப்பிட முடியவில்லை; எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்துவிடுவேன். அதனால், எனக்கு குளுக்கோஸ் (IV) ஏற்றப்பட்டது. என் கையில் பலமுறை ஊசி போட்டதால் கை வீங்கி வலித்தது. எனக்கு நினைவிருக்கும் வரை சுமார் 13 பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.நான் குணமடைந்து வருவதாகவே நாங்கள் நினைத்தோம், ​ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு மருத்துவர் எனக்கு தவறான மருந்தைச் செலுத்தியபோது பிரச்சனை தொடங்கியது. மருந்து செலுத்திய சில நிமிடங்களிலேயே, என் உடல் முழுவதும் ஒரு பலூனைப் போல வீங்கத் தொடங்கியது. வீக்கம் அதிகமாக இருந்ததால், நான் தூங்காவிட்டாலும் என் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. என் பெற்றோர் மருத்துவர்களிடம் உதவி கேட்டனர், ஆனால் அவர்கள் ஒவ்வொருவராக என்னைக் கைவிட்டனர். என்னைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை, தலைமை மருத்துவர் அன்று பணியில் இல்லை. நான் இறந்துவிடுவேன் என்று யாரோ சொன்னார்கள,. அதினால் என் பெற்றோர் ஆத்திரமடைந்தனர்; மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் யாராவது உதவிக்கு வருவார்களா என்று மருத்துவமனையின் ஒவ்வொரு கதவையும் தட்டினார்கள். ஆனால் ஒருவரும் வரவில்லை. பக்கத்து அறையில் இருந்த ஒரு முதியவர் நான் உயிருக்குப் போராடுவதைக் கண்டார், மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகள் எங்கள் கண்ணீரைப் பார்த்தார்கள், ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.​அப்போதுதான் தேவன் கிரியை செய்யத் தொடங்கினார். என் அம்மா மருத்துவமனை தொலைபேசியைப் பயன்படுத்தி (அப்போது மொபைல் போன்கள் கிடையாது) என் பாட்டியை அழைத்தார். என் பாட்டியின் சகோதரியும், எனது இரண்டு அத்தைகளும் உடனடியாக என்னைப் பார்க்க வந்தார்கள். உடல் வீக்கத்துடன் நான் இன்னும் கவலைக்கிடமாகவே இருந்தேன். என் கண்கள் மூடியிருந்ததால் நான் தூங்குவதாக நினைத்து என் அம்மா அவர்களிடம் நடந்த அனைத்தையும் சொன்னார். அவர்கள் பேசுவதை என்னால் கேட்க முடிந்தது, நான் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதை உணர்ந்தேன். என்னைப் பார்க்க வந்த அத்தைகளும், பாட்டியும் என் படுக்கைக்கு அருகில் நின்று, என் மேல் கைகளை வைத்து, இயேசுவின் நாமத்தில் எனக்காக ஜெபிக்கத் தொடங்கினார்கள். சத்தமான ஜெபங்களோ அல்லது ஆர்ப்பாட்டமோ எதுவுமில்லை. எனக்காக இரத்தம் சிந்திய தேவனிடம், விசுவாசத்தோடு ஜெபித்த மூன்று சாதாரண பெண்களின் எளிய ஜெபம் அது. அவர்கள் இயேசுவின் இரத்தத்தை என் மேல் கோரி, தைரியமாக விசுவாசத்துடன் ஜெபித்தார்கள். தேவன் அந்த ஜெபத்தைக் கேட்டார். அடுத்த அரை மணி நேரத்திற்குள், என் உடல் வீக்கம் குறைந்து நான் உயிர் பெற்றேன். நான் குணமடைந்தேன், அது தேவன் செய்த காரியம் என்பதை நான் அறிந்தேன்!​மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, பக்கத்து அறையில் நோயாளியாக இருந்த அந்த முதியவர் என்னைப் பார்க்க வந்தார். என் பாட்டி வீட்டிற்கு வந்து, எங்களோடு உணவு உண்டு, நான் விளையாடுவதைப் பார்த்தார். அவர் கிளம்பும்போது, “இந்தச் சிறு குழந்தை உயிருக்குப் போராடியதை நான் பார்த்தேன். அதே குழந்தை இப்போது ஏதும் நடக்காதது போல படிக்கட்டுகளில் ஓடி விளையாடுகிறது. உங்கள் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. இது ஒரு அற்புதம்! உங்கள் தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்டார், அவர் உண்மையாகவே பெரியவர்!” என்றார். அவருடைய வார்த்தைகள் என் விசுவாசத்தை உறுதிப்படுத்தின.​எனது குடும்பத்தின் மூலம் தேவனைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன், தேவாலயத்திற்குச் சென்றேன், பைபிளை வாசித்தேன், ஆனால் இந்த முதல் அற்புதம் எனக்குள் ஏதோ ஒன்றை மாற்றியது. தேவன் என் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்பதையும், சாதாரண மக்களின் ஜெபங்களுக்கும் அவர் பதிலளிப்பார் என்பதையும் நான் உணர்ந்தேன். என் வாழ்க்கை ஒரு பரிசு என்பதையும், நான் தேவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் புரிந்துகொண்டேன். அந்த வயதில் என்னால் இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாவிட்டாலும், என் ஆத்துமா தேவனை நோக்கித் திரும்பியது. அதுவே எனது முதல் இரட்சிப்பின் தருணமாக இருக்கலாம். எனக்காக மரித்து, என்னை மரணத்திலிருந்து மீட்டெடுத்த தேவன் உண்மையானவர் என்பதை நான் நேருக்கு நேர் சந்தித்தேன். தேவன் எனக்கு நிஜமானவரானார். அந்த முதல் அற்புதம் என் வாழ்க்கையின் பாதையை நன்மையாக மாற்றியதை நான் பல ஆண்டுகளில் உணர்ந்திருக்கிறேன். முடியாத காரியங்கள் நிகழும்போது அதில் அற்புதங்களை எதிர்பார்க்க அது என்னைத் தயார்படுத்தியது. ஜெபத்தின் வல்லமையையும், இயேசுவின் நாமத்திலுள்ள அதிகாரத்தையும் புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.​அன்று எனக்காக ஜெபித்த எனது இரண்டு அத்தைகளுக்கும், பாட்டிக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர்களின் எளிய மற்றும் தைரியமான விசுவாசம் இல்லையென்றால், இன்று நான் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்க தேவன் அவர்களைப் பயன்படுத்தினார். எதிரி எனக்குத் தீங்கு செய்யவும், என்னைக் கொல்லவும் நினைத்ததை, தேவன் நன்மையாக மாற்றினார். நம்முடைய தேவன் அத்தனை மகத்துவமானவர்!​"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." - யாக்கோபு 5:16​"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." - ஏசாயா 53:5

கர்த்தருக்குப் பரிசுத்தம்

​சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய (Holiness to the Lord) என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

​"பரிசுத்தம்" என்ற வார்த்தை நம்மில் பலருக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமீபகாலமாக, "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த வாசகம் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து வருகிறது. தேவன் மோசே மூலமாக ஆசரிப்புக் கூடாரத்தில் (ஆலயம்) ஆராதனை செய்வதற்கான வழிமுறைகளைக் கொடுத்தபோது இதைக் குறிப்பிடுகிறார். ஆராதனையில் மகா பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போது பிரதான ஆசாரியர் எப்படி உடை அணிய வேண்டும் என்பதற்கு அவர் குறிப்பிட்ட வழிமுறைகளைத் தருகிறார். ஆசாரிய உடையில் ஒரு பகுதி தலைப்பாகை ஆகும். யாத்திராகமம் புத்தகத்தில் வேதம் இவ்வாறு கூறுகிறது:​"நீ பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைச் செய்து, அதிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று முத்திரைவெட்டாக வெட்டி, அது தலைப்பாகையின்மேல் இருக்கும்படி ஒரு இளநீல நூலினால் அதைக் கட்டக்கடவாய்; அது தலைப்பாகையின் முன்புறத்தில் இருக்கவேண்டும். இஸ்ரவேல் புத்திரர் பாவ நிவிர்த்திக்காக பரிசுத்தம் பண்ணுகிற சகல பொருட்களையும் கொண்டு வரும் பொழுது பாவத்தைத் தீர்க்கும்படிக்கு, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய சமூகத்தில் அங்கிகரிக்கப்படும்படிக்கு, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்." யாத்திராகமம் 28:36-38​

பிரதான ஆசாரியராகிய ஆரோனும், அவருக்குப் பின்வரும் தலைமுறை ஆசாரியர்களும் கர்த்தருடைய சமூகத்தில் பணிவிடை செய்ய நுழையும்போதெல்லாம் இந்தத் தலைப்பாகையை அணிய வேண்டும். தலைப்பாகையில் உள்ள அந்தப் பொற்பட்டம், பிரதான ஆசாரியர் தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமானவர் என்றும், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தராகப் பிரிக்கப்பட்டவர் என்றும் நினைவூட்டுவதற்காக இருந்தது.​சகரியா புத்தகத்தில், சாத்தான் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவின் மேல் குற்றம் சுமத்துகிறான், ஆனால் கர்த்தர் யோசுவாவைப் பாதுகாக்கிறார். யோசுவாவின் அழுக்கான ஆடைகள் நீக்கப்பட்டு, சுத்தமான ஆடைகள் மாற்றப்படுகிறது.தலைப்பாகையும் அவன் தலைமேல் வைக்கப்படுகின்றது. இது ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யும் ஆசாரியரின் ஆடையாகக் கருதப்படுகிறது. பிறகு கர்த்தர் "கிளை" (The Branch) என்பதைக் குறித்துப் பேசுகிறார் - இதன் மூலம் பரிசுத்தம் என்பது இயேசு சிலுவையில் செய்யப்போகும் காரியத்தோடு நேரடியாக இணைக்கப்படுகிறது. இயேசு இல்லையென்றால் யோசுவா பரிசுத்தமாக இருக்க முடியாது! (சகரியா அதிகாரம் 3 வாசிக்கவும்).​இயேசுவே மகா பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்பதை வேதாகமம் பல இடங்களில் காட்டுகிறது. இதன் மூலம் ஆலயங்களில் ஆசாரியர்களின் முறைமை முடிவுக்கு வந்தது. சொல்லப்போனால், இயேசு சிலுவையில் மரித்தபோது, மகா பரிசுத்த இடத்தை மறைத்துக் கொண்டிருந்த திரைச்சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. நமக்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய இனி ஒரு ஆசாரியரோ அல்லது சடங்குகளோ தேவையில்லை. இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் இதை நிறைவேற்றி முடித்தார். வேதாகமம் இத்துடன் நின்றுவிடாமல் ஒரு படி மேலே சென்று, இயேசுவின் மரணத்தின் மூலம் நாம் கிருபையைப் பெற்றவுடன் நாமும் அந்த ஆசாரியத்துவத்தின் ஒரு பகுதியாக மாறுகிறோம் என்று கூறுகிறது. பேதுரு சபைக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்:​"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." 1 பேதுரு 2:9​

இயேசு சிலுவையில் செய்த காரியத்தினால், நீங்கள் பழைய காலத்து பிரதான ஆசாரியர்களுக்குச் சமமான நிலையிலும், கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்திலும் அவருடன் நிற்கிறீர்கள். உங்களுக்காக ஜெபிக்கவோ அல்லது பாவநிவிர்த்தி செய்யவோ இனி ஒரு ஆசாரியர் தேவையில்லை. நீங்கள் இயேசுவோடு உடன் சுதந்தரவாளிகளாக தைரியமாக கிருபாசனத்தை அணுகி, "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்று நிற்க முடியும்.​

Holiness to the Lord - சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

இப்போது இந்த ஓவியத்தைப் பற்றி - இந்த ஓவியத்தின் மையப்புள்ளி ஆசாரியரின் தலைப்பாகை. அந்தத் தலைப்பாகை உங்களுடையது. இயேசுவின் சிலுவை மரணத்தினால் தேவன் எப்படி யோசுவாவையும் ஆரோனையும் பரிசுத்தமாகக் கண்டாரோ, அப்படியே உங்களையும் பரிசுத்தமாகக் காண்கிறார். தலைப்பாகையின் கீழ் உள்ள நீல நிறத் துணி, நீங்கள் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தபோது உங்கள் அழுக்கான ஆடைக்கு மாற்றாகக் கொடுக்கப்பட்ட ஆசாரிய ஆடையைக் குறிக்கிறது. பின்னணியில் கிழிந்திருக்கும் திரைச்சீலை - இயேசு சிலுவையில் முடித்த காரியம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைக்கிறது என்பதைக் குறிக்கிறது. அபிஷேகத் தைல ஜாடி, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாகவும் ராஜரீக ஆசாரியக் கூட்டமாகவும் இந்த உலகிற்காக வேண்டுதல் செய்ய உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அபிஷேகத்தைக் குறிக்கிறது. என் ஓவியங்களில் நீங்கள் இறகைக் கண்டால், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறிக்கும்.​இந்த ஓவியம் உங்களைப் பற்றியது, உங்கள் ஆசாரியத்துவம் மற்றும் உங்கள் பரிசுத்தத்தைப் பற்றியது. தேவன் உங்களைக் "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்று காண்கிறார். நீங்கள் உங்களை அப்படிப் பார்க்கிறீர்களா? உங்கள் ஆசாரியத்துவத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா அல்லது தேவனுடைய ராஜ்யத்தில் உங்கள் அடையாளத்தை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா?​​

"கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? இயேசுவின் சிலுவை மரணம் நம்மை ராஜரீக ஆசாரியர்களாக மாற்றியுள்ளது என்பதே உண்மையான அர்த்தமாகும்.

உயிர்த்தெழுதல் அனைத்தையும் மாற்றுகிறது

சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய (Resurrection changes everything) ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

​எனது விசுவாசத்தைத் தீர்மானிப்பதில் சிலுவையும் உயிர்த்தெழுதலும் மிக முக்கியமானவை. இவை இரண்டையும் நீக்கிவிட்டால், இயேசு வெறும் ஒரு வீடற்ற மனிதராகவே தெரிவார்; அவர் நல்ல விஷயங்களைப் போதித்தார், அற்புதங்களைச் செய்தார், எருசலேமைச் சுற்றியுள்ள நகரங்களில், தான் கடவுள் என்று கூறிக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்லத் தோன்றும். இயேசு ஒரு சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால், தன்னைத் தான் தேவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. ஒரு நல்ல போதகர் தனது உண்மையான அடையாளத்தைப் பற்றி பொய் சொல்ல முடியாது, அல்லவா? ஆனால் அவர் உண்மையில் தேவனாக இருந்ததால், நாம் அவருடைய வார்த்தைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இயேசு தனது பொது வாழ்க்கையில் தன்னைப்பற்றி பல தைரியமான உண்மைகளைக் கூறினார். அவர் செய்த அற்புதங்கள் அவருக்கு உண்மையான வல்லமை இருப்பதை நிரூபித்தன. அது மாயாஜாலம் அல்ல. உயிரைக் கொடுக்கிற மற்றும் நம் வாழ்க்கையையே மாற்றுகிற உண்மையான வல்லமை ஆகும்.
​யோவான் 11:25-ல் அவருடைய முக்கியமான ஒரு வாக்குறுதி பதிவாகியுள்ளது. இயேசு அவளை நோக்கி: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" என்றார். இயேசுவுக்கு மிக நெருக்கமான சீடரான யோவான் இதை பதிவு செய்துள்ளார். இயேசு சிலுவையில் தொங்கும்போது அவருக்கு அருகில் நின்ற ஒரே சீடர் இவர்தான். லாசரு என்ற மனிதனை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்புவதற்கு சற்று முன்பாகவே இயேசு இந்தத் தைரியமான கூற்றைக் கூறினார். லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது, ஆனால் இயேசு அவனிடம் பேசி, கல்லறையிலிருந்து வெளியே வரும்படி சொன்னார்; லாசருவும் அப்படியே செய்தான். ஒரு இறந்த மனிதன் மீண்டும் உயிர் பெற்றான். இந்த அற்புதம் இயேசுவை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்தது. இறுதியில் இதுவே அவர் கைது செய்யப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

Resurrection Changes Everything - சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

இறந்தவனை உயிரோடு எழுப்பிய தங்கள் மேசியா, ஏன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவில்லை என்று சிலுவையின் அருகில் நின்ற யோவான் நிச்சயம் யோசித்திருப்பார். வல்லமை மிக்கவராக இருக்க வேண்டிய மேசியா, இதோ கண்களுக்கு முன்பாக சிலுவையில் அறையப்பட்டு இறந்து கிடக்கிறார். இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படுவதையும், துணிகளால் சுற்றப்பட்டு கல்லறையில் வைக்கப்படுவதையும், அந்தக்கல்லறை முத்திரையிடப்பட்டு ரோமானிய வீரர்கள் காவல் காப்பதையும் அவர் பார்த்தார். ஆனால் மூன்றாம் நாள், ஒரு சில பெண்கள் வந்து இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று சொன்னபோது யோவானால் நம்ப முடியவில்லை. ஆர்வத்தினால் அவர் ஓடிச் சென்று பார்த்தபோது, இயேசுவின் உடல் அங்கு இல்லை. ஒருவேளை யாராவது திருடியிருப்பார்களோ?
​ஆனால் அதன் பின்பு, இயேசு யோவானுக்கும் மற்ற சீடர்களுக்கும் நேரில் தோன்றினார். அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார், பேசினார். ஒரு ஆவி உணவு உண்ண முடியுமா? அவருடைய உடல் உண்மையானதாக இருந்தது! யோவானும் மற்ற சீடர்களும் இயேசுவைப் பார்த்து விசுவாசித்தார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலை அவர்கள் எந்த அளவுக்கு உறுதியாக நம்பினார்கள் என்றால், அதன் பிறகு அவர்கள் தங்கள் உயிரைப் பெரியதாகக் கருதவில்லை. மதத் தலைவர்களின் மிரட்டல்களுக்கும் ரோமானிய அரசின் சித்திரவதைகளுக்கும் பயப்படாமல், அவர்கள் இயேசுவின் மரணத்தைப் பற்றியும் உயிர்த்தெழுதலைப் பற்றியும் பேசினார்கள். இதற்காக அவர்களுக்குக் கிடைத்த பரிசு என்ன? அவர்கள் அனைவரும் துன்புறுத்தப்பட்டார்கள், சிறையில் மரித்தார்கள் அல்லது விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார்கள். இவர்கள் ஏதோ மத வெறியர்கள் அல்ல; இவர்கள் இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நேரில் கண்ட சாட்சிகள்.
​நேரில் கண்ட சாட்சிகள் ஏன் ஒரு இறந்த மனிதனுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டும்? சீடர்கள் ஏழைகளாகவும், பசியோடும், குளிரோடும் வாடினார்கள். அவர்களை எது ஊக்கப்படுத்தியது? தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட அவர்களால் பொய் சொல்ல முடியவில்லை. இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் அந்த மனிதர்களை உலகெங்கும் சென்று தாங்கள் கண்டதை அறிவிக்கத் தூண்டியது. உயிர்த்தெழுதல் அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது! உயிர்த்தெழுதல் என்பது உண்மையானால், யாரால் சும்மா இருக்க முடியும்? அது அனைத்தையும் மாற்றுகிறது!!