Tamil Post: Tamil

தூதுவர்

சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

The Messenger- சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

பரிசுத்த வேதாகமத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை இதுதான். இயேசுவின் கதை முடிந்துவிட்டது என்று தோன்றியபோது, ரோமானிய வீரர்களால் அவரது கல்லறை முத்திரையிடப்பட்டது. அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஒரு சில பெண்கள் அவருடைய உடலில் சுகந்த வர்க்கமிடுவதற்காகச் சென்றார்கள். அந்தப் பெரிய கல்லை எப்படி உருட்டித் தள்ளுவது என்று அவர்களுக்குத் தெரியாது, ஆனால், தங்கள் ஆண்டவர் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு மிகுந்திருந்ததால், நியாயமான கேள்விகள் அவர்களுக்குப் பெரியதாகத் தெரியவில்லை. அவர்கள் விசுவாசத்தோடு அதிகாலையில் அடி எடுத்து வைத்தார்கள்.​இயேசு விட்டுச் சென்ற 11 சீடர்களும் ஒளிந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தப் பெண்கள், தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வெளியே சென்றார்கள். அவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, கல் ஏற்கனவே உருட்டித் தள்ளப்பட்டிருந்தது, கல்லறை திறந்திருந்தது. அங்கே ஒரு தேவதூதர் அவர்களை வரவேற்றார்.​இதற்கு பின்பு மகதலேனா மரியாள், கல்லறையின் தோட்டத்தில் தங்கித் தன் இரட்சகரைத் தேடிக்கொண்டிருந்தாள். அவள் மிகுந்த துக்கத்தில் இருந்தாள், நடப்பவைகளை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் இயேசுவை நேருக்கு நேர் சந்தித்தாள். இது எப்படிச் சாத்தியம்? அவர் சிலுவையில் இருந்து இறக்கப்படுவதையும், துணிகளால் சுற்றப்பட்டு கல்லறையில் வைக்கப்படுவதையும் அவள் பார்த்திருந்தாள்.​அவளுடைய இரட்சகர் உண்மையாகவே மரணத்தை வென்றுவிட்டார். "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" என்ற அவருடைய வார்த்தைகள் இறுதியாக உண்மையாகின. இயேசு, தான் உயிர்த்தெழுந்த செய்தியைச் சீடர்களிடம் கொண்டு செல்லும்படி அவளைப் பணித்தபோது, அவள் அதைச் சரியாகச் செய்து முடித்தாள்! அவள் முடிந்தவரை வேகமாக ஓடிச் சென்று தான் கண்டதை சீடர்களிடம் சொன்னாள்.​இயேசு உயிர்த்தெழுந்ததற்கு முதல் சாட்சியாக அவள் மாறினாள். அந்த நாட்களில் ஒரு பெண் என்பவள் முக்கியத்துவம் இல்லாதவளாகக் கருதப்பட்டாள். அவளுடைய சாட்சி நீதிமன்றங்களில் கூட செல்லுபடியாகாது, அப்படியிருந்தும் இயேசு அவளையே தெரிந்தெடுத்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையில் அவள் உண்மையாக இருந்தாள். தன் உயிர், தன் நற்பெயர் என எல்லாவற்றையும் பணையம் வைத்துச் சாட்சி சொன்னாள், ஏனென்றால் அவள் உயிர்த்தெழுதலைக் கண்டாள்! அது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அவளிடம் இருந்த அனைத்தையும் விட அது மதிப்புமிக்கது.​உயிர்த்தெழுதல் இன்றும் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அதை நாம் அங்கீகரிக்கும்போது, அது நமக்குள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அது மாற்றுகிறதா? இல்லையென்றால், உயிர்த்தெழுதலைப் பற்றிய புதிய வெளிப்பாடு நமக்குத் தேவைப்படலாம்.​

மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள். யோவான் 20:18

விசுவாசமே முக்கியம்

(Faith Matters)சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ரோமர் 4:3

ஆபிரகாம் தன் பெரிய சாதனைகளுக்காகவோ அல்லது தர்ம காரியங்களுக்காகவோ அல்ல, மாறாக தேவனை விசுவாசித்ததால்தான் நீதியுள்ளவனாகக் கருதப்பட்டான். அவர் தேவனிடத்தில் தன் கண்களை நிலைநிறுத்தி, தேவன் தாம் வாக்குறுதி அளித்ததைச் செய்ய வல்லவர் என்று உறுதியாக நம்பியதாலேயே நீதியுள்ளவராக எண்ணப்பட்டார். கிட்டத்தட்ட 100 வயதான ஆபிரகாம், தம் மூலமாகவும், தம்முடைய சந்ததி மூலமாகவும் உலகம் முழுவதும் ஆசீர்வதிக்கப்படும் என்று விசுவாசித்தார். ஆபிரகாமும் அவருடைய மனைவி சாராளும் குழந்தையில்லாமல், குழந்தை பெறும் வயதைக் கடந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், இது சாத்தியமற்றது. ஆனாலும், தேவன் தம்முடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்று ஆபிரகாம் விசுவாசித்தார். அவருடைய விசுவாசம் அவருக்கு நீதியாக (righteousness) எண்ணப்பட்டது. விசுவாசத்தின் இலக்கு: (The Object of Faith) இன்று நாம், "உங்களை நீங்களே நம்புங்கள்" அல்லது "நம்பிக்கை வை" போன்ற சொற்றொடர்களைக் கேட்கிறோம். விசுவாசம் கொண்டிருப்பதைக் காட்டிலும், விசுவாசத்தின் இலக்கு மிக முக்கியமானது. ஆபிரகாம் தன்னைத்தானே விசுவாசிக்காமல், தேவனை விசுவாசித்தார்.அவர் தன்னை நம்பவில்லை, ஏனெனில், அவர் தன்னை எவ்வளவு கடினமாக நம்பினாலும், குழந்தை பெறும் வயதைக் கடந்துவிட்ட 90 வயதிற்கு மேற்பட்ட ஒரு தம்பதியருக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று அவருக்குத் தெரியும். எனவே, ஆபிரகாம் ஜீவனுக்கே ஆதாரமானவரை விசுவாசித்தார். இதைத் தவிர வேறு எதையேனும் விசுவாசிப்பது ஒருவிதமான மறுப்பாகவோ அல்லது அதையும்விட மோசமாக, பெருமையாகவோ இருந்திருக்கும்.இன்று தேவனுடனான உங்கள் விசுவாசப் பயணத்தில் நீங்கள் எங்கே இருந்தாலும், அவர் உங்களுடன் ஆழமான நட்பை விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவன் உங்களைக் காண்கிறார், மேலும் உங்களை நம்பிக்கையினாலும் ஜீவனாலும் நிரப்ப விரும்புகிறார்.

Faith Matters - சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

சிந்திப்பதற்கான கேள்விகள்:

  • உங்களைப் பொறுத்தவரை நம்பிக்கை என்றால் என்ன?
  • நம் விசுவாசத்தின் இலக்கு என்ன/யார்?
  • இன்று நீங்கள் எதற்காக தேவனை நம்புகிறீர்கள்?

விசுவாசமானது, நாம் நம்பியிருக்கிறவைகளின் நிச்சயமும், காணப்படாதவைகளின் உறுதியுமான நம்பிக்கையும் ஆகும். எபிரேயர் 11:1

மீட்பர்

இது சுக்கி ஜோசப் பிரேம்நாத் எழுதிய “Restorer” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்


அப்பொழுது அவர் தோமாவை நோக்கி: “உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார். யோவான் 20:27


தோமா, இயேசுவின் உயிர்த்தெழுதலைச் சந்தேகப்பட்ட சீடர். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின், ஆணிகளால் துளைக்கப்பட்ட கைகளிலும், விலாவிலுள்ள காயத்திலும் தான் தன் கையைப் போட்டாலொழிய இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்று தான் நம்ப மாட்டேன் என்றார். அவருடைய இந்த வார்த்தைகள் அவருக்கு சந்தேகப்படும் தோமா”என்ற பெயரைப் பெற்றுத் தந்தன. உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவரை விட்டுவிடவில்லை, அதற்குப் பதிலாக, இயேசு மற்ற சீஷர்களுடன் கூடிவந்திருந்த இடத்தில் அவரைச் சந்தித்து, தம்முடைய கைகளையும்விலாவையும் சோதித்துப் பார்த்து விசுவாசிக்கும்படி அவருக்கு அனுமதி அளித்தார். விசுவாசத்தின் மீட்பராகிய இயேசு தோமாவைத் தம்மிடமாக மீட்டெடுத்தார், அவருடைய சந்தேகத்தின் போதும் அவருக்குத் துணையாய் நின்றார். அந்தச் சீடர் உடனடியாக விசுவாசித்தார். அவருடைய விசுவாசம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டதால், அவர் தனக்குத் தெரிந்த நாட்டின் சுகத்தை விட்டுவிட்டு, ஒரு அயல்நாட்டிற்கு, அதாவது இந்தியாவுக்கு பயணம் செய்தார். அவர் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்கண்ட சாட்சியாகப் பார்த்தவர், உயிர்த்தெழுதலின் செய்தியைத் தனக்குள்ளேயே வைத்திருக்க முடியவில்லை. அவர் இந்தியாவிற்குப் பயணம் செய்து, கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தியை அங்கிருந்த மக்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் சென்று, இயேசுவின் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டார் என்று நம்பப்படுகிறது, இறுதியில் அவர் தற்போதைய இந்தியாவில் உள்ள சென்னை, புனித தோமையர் மலையில்( St. Thomas Mount)வேதசாட்சியாக (martyred) மரித்தார். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன், அவர் என் வசிப்பிடத்திற்கு அருகில் (என் வீட்டிலிருந்து 4 மைல் தொலைவில்) வேதசாட்சியாக மரித்தார். அவர் நடந்த பாதையில்தான் நான் அடிக்கடி நடக்கிறேன் என்று நினைப்பதுண்டு. ஒரு மனிதனைத் தனக்குத் தெரியாத ஒரு நாட்டில் வேதசாட்சியாக மரிக்கத் தூண்டியது எது?மரணத்தையும் அவரையும் ஜெயித்த தம் இரட்சகரின் மீட்டெடுக்கப்பட்ட அன்பு மட்டுமே அதற்கு உந்துதலாக இருந்தது. உயிர்த்தெழுந்த கிறிஸ்து இன்றும் அதே போலவே இருக்கிறார். நம்முடைய சந்தேகத்தின்தருணங்களிலும்கூட அவர் நம் பக்கத்தில் நிற்கிறார். சந்தேகமானதுஉங்களை அவரைவிட்டுத் திரும்பிச் செல்ல வைக்காமல், மாறாக, அவரை இன்னும் நெருங்கிச் சென்று கேட்கும்படி தூண்டட்டும், அவர் உண்மையுள்ளவர்.

குறிப்பு: தோமா வேதசாட்சியாக மரித்த புனித தோமையர் மலை, உண்மையில் நான் வளர்ந்த இந்தியாவில் உள்ள சென்னையின் அருகில் உள்ளது. உங்களால் அங்கு சென்று வர முடிந்தால், அது ஒரு ஆழமான அனுபவமாக இருக்கும்.

Restorer - சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்