தெருக்களில் தேவதூதர்கள்
சகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ( Angels in the Street) ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.
அநேக நேரங்களில் நான் வாழும் நகரத்திற்காக , தேசத்திற்காக மற்றும் இந்த உலகத்திற்காக ஜெபிப்பது எனக்கு ஒரு போராட்டமாகவே தான் இருந்தது. வன்முறை, போர், பிரிவினை மற்றும் அமைதியின்மை ஆகியவற்றைக் காணும்போது, “தன் அறையில் அமர்ந்திருக்கும் ஒரு சாதாரண மனிதனின் ஜெபம் எதை மாற்றிவிடப் போகிறது?” என்று நான் அடிக்கடி வியந்ததுண்டு.
ஒரு நாள் ஆண்டவர் என்னிடம்: “உன் ஜெபம் வெறும் வெற்றிடத்தில் வீசப்படும் வார்த்தைகள் அல்ல. வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரானவரை நோக்கி நீ உன் ஜெபங்களைத் திருப்பும்போது, அவை பெரிய காரியங்களைச் சாதிக்கும். பெரிய காரியங்களைக் கேட்கத் தயங்காதே, ஏனென்றால் நானே வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர் (I AM).”என்று சொன்னார்.
எனக்கு மிஞ்சிய மற்றும் என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பெரிய காரியங்களுக்காக ஜெபிப்பதற்கு அது என்னை அதிகமாக ஊக்கப்படுத்தியது. நம்மைச் சுற்றிலும் சில குரல்கள்,நாம் எவ்வளவு பாவம் செய்திருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டி, இது போன்ற ஜெபங்களைச் செய்ய நாம் தகுதியற்றவர்கள் என்று நம்மைச் சிறுமைப்படுத்த முயற்சிக்கும்.ஆனால் இயேசு சிலுவையில் செய்த தியாகபூர்வமான மரணம், நாம் தைரியமாக அவருடைய சமூகத்தில் பிரவேசிக்க நம்மை உற்ச்சாகப்படுத்த வேண்டும். அதுவே கிருபை.
ஒரு நாள் நகரம், நாடு மற்றும் உலகத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் பரலோகத்திலிருந்து இறங்கி நகரத்தின் தெருக்களில் ஊடுருவிச் செல்லும் ஒரு காட்சியை நான் கண்டேன். அது மிகவும் அழகாகவும் வல்லமையாகவும் இருந்தது! அந்தத் தரிசனமே இந்த மென்மையான பாஸ்டல் (soft pastel) ஓவியத்திற்கு உந்துதலாக அமைந்தது.
இயல்பான கண்களுக்கு நாம் குழப்பத்தையே காண்கிறோம், ஆனால் அவருடைய நாமத்தினால் அழைக்கப்படும் மக்கள் பிதாவின் இருதயத்தோடு இணைந்து பெரிய காரியங்களுக்காக ஜெபிக்கும்போது, பரலோகம் அசைக்கப்படும், இருள் அகற்றப்படும். நமது சுயநல ஆசைகள் மற்றும் அகந்தையினால் நாம் ஏற்படுத்திய சேதங்கள் சீர்செய்யப்படும். தேவன் குணமாக்குவார், மீட்டெடுப்பார் மற்றும் உயிர்ப்பிப்பார்.

இடைவிடாமல் ஜெபியுங்கள். அவருடைய ராஜ்யம் வருவதாக. அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக.
”தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது..” — எபிரெயர் 1:7
”அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.” — 2 ராஜாக்கள் 6:16-17
அன்புள்ள தேவனே,
நீர் ஒரு பெரிய தேவன் என்பதால், நான் தைரியமாக உமது சமூகத்தில் வந்து பெரிய காரியங்களுக்காக ஜெபிக்கிறேன். பிதாவே, உடைந்த உள்ளங்களைக் குணமாக்கும், பலவீனமானவர்களைப் பாதுகாத்தருளும், உலக நாடுகள் அனைத்தையும் ஆசீர்வதியும். ஒவ்வொரு சங்கிலியையும் உடைக்கவும், அரண்களைத் தகர்க்கவும், இருளைப் போக்கவும் உமது தூதர்களை அனுப்பும்.
இயேசுவின் நாமத்தில், ஆமென்.
