உயிர்த்தெழுதல் அனைத்தையும் மாற்றுகிறது

சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய (Resurrection changes everything) ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

​எனது விசுவாசத்தைத் தீர்மானிப்பதில் சிலுவையும் உயிர்த்தெழுதலும் மிக முக்கியமானவை. இவை இரண்டையும் நீக்கிவிட்டால், இயேசு வெறும் ஒரு வீடற்ற மனிதராகவே தெரிவார்; அவர் நல்ல விஷயங்களைப் போதித்தார், அற்புதங்களைச் செய்தார், எருசலேமைச் சுற்றியுள்ள நகரங்களில், தான் கடவுள் என்று கூறிக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்லத் தோன்றும். இயேசு ஒரு சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால், தன்னைத் தான் தேவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. ஒரு நல்ல போதகர் தனது உண்மையான அடையாளத்தைப் பற்றி பொய் சொல்ல முடியாது, அல்லவா? ஆனால் அவர் உண்மையில் தேவனாக இருந்ததால், நாம் அவருடைய வார்த்தைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இயேசு தனது பொது வாழ்க்கையில் தன்னைப்பற்றி பல தைரியமான உண்மைகளைக் கூறினார். அவர் செய்த அற்புதங்கள் அவருக்கு உண்மையான வல்லமை இருப்பதை நிரூபித்தன. அது மாயாஜாலம் அல்ல. உயிரைக் கொடுக்கிற மற்றும் நம் வாழ்க்கையையே மாற்றுகிற உண்மையான வல்லமை ஆகும்.
​யோவான் 11:25-ல் அவருடைய முக்கியமான ஒரு வாக்குறுதி பதிவாகியுள்ளது. இயேசு அவளை நோக்கி: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்றார். இயேசுவுக்கு மிக நெருக்கமான சீடரான யோவான் இதை பதிவு செய்துள்ளார். இயேசு சிலுவையில் தொங்கும்போது அவருக்கு அருகில் நின்ற ஒரே சீடர் இவர்தான். லாசரு என்ற மனிதனை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்புவதற்கு சற்று முன்பாகவே இயேசு இந்தத் தைரியமான கூற்றைக் கூறினார். லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது, ஆனால் இயேசு அவனிடம் பேசி, கல்லறையிலிருந்து வெளியே வரும்படி சொன்னார்; லாசருவும் அப்படியே செய்தான். ஒரு இறந்த மனிதன் மீண்டும் உயிர் பெற்றான். இந்த அற்புதம் இயேசுவை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்தது. இறுதியில் இதுவே அவர் கைது செய்யப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

Resurrection Changes Everything – சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

இறந்தவனை உயிரோடு எழுப்பிய தங்கள் மேசியா, ஏன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவில்லை என்று சிலுவையின் அருகில் நின்ற யோவான் நிச்சயம் யோசித்திருப்பார். வல்லமை மிக்கவராக இருக்க வேண்டிய மேசியா, இதோ கண்களுக்கு முன்பாக சிலுவையில் அறையப்பட்டு இறந்து கிடக்கிறார். இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படுவதையும், துணிகளால் சுற்றப்பட்டு கல்லறையில் வைக்கப்படுவதையும், அந்தக்கல்லறை முத்திரையிடப்பட்டு ரோமானிய வீரர்கள் காவல் காப்பதையும் அவர் பார்த்தார். ஆனால் மூன்றாம் நாள், ஒரு சில பெண்கள் வந்து இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று சொன்னபோது யோவானால் நம்ப முடியவில்லை. ஆர்வத்தினால் அவர் ஓடிச் சென்று பார்த்தபோது, இயேசுவின் உடல் அங்கு இல்லை. ஒருவேளை யாராவது திருடியிருப்பார்களோ?
​ஆனால் அதன் பின்பு, இயேசு யோவானுக்கும் மற்ற சீடர்களுக்கும் நேரில் தோன்றினார். அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார், பேசினார். ஒரு ஆவி உணவு உண்ண முடியுமா? அவருடைய உடல் உண்மையானதாக இருந்தது! யோவானும் மற்ற சீடர்களும் இயேசுவைப் பார்த்து விசுவாசித்தார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலை அவர்கள் எந்த அளவுக்கு உறுதியாக நம்பினார்கள் என்றால், அதன் பிறகு அவர்கள் தங்கள் உயிரைப் பெரியதாகக் கருதவில்லை. மதத் தலைவர்களின் மிரட்டல்களுக்கும் ரோமானிய அரசின் சித்திரவதைகளுக்கும் பயப்படாமல், அவர்கள் இயேசுவின் மரணத்தைப் பற்றியும் உயிர்த்தெழுதலைப் பற்றியும் பேசினார்கள். இதற்காக அவர்களுக்குக் கிடைத்த பரிசு என்ன? அவர்கள் அனைவரும் துன்புறுத்தப்பட்டார்கள், சிறையில் மரித்தார்கள் அல்லது விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார்கள். இவர்கள் ஏதோ மத வெறியர்கள் அல்ல; இவர்கள் இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நேரில் கண்ட சாட்சிகள்.
​நேரில் கண்ட சாட்சிகள் ஏன் ஒரு இறந்த மனிதனுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டும்? சீடர்கள் ஏழைகளாகவும், பசியோடும், குளிரோடும் வாடினார்கள். அவர்களை எது ஊக்கப்படுத்தியது? தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட அவர்களால் பொய் சொல்ல முடியவில்லை. இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் அந்த மனிதர்களை உலகெங்கும் சென்று தாங்கள் கண்டதை அறிவிக்கத் தூண்டியது. உயிர்த்தெழுதல் அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது! உயிர்த்தெழுதல் என்பது உண்மையானால், யாரால் சும்மா இருக்க முடியும்? அது அனைத்தையும் மாற்றுகிறது!!