சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ‘பரிசுத்த பூமி’ ( Holy Ground )ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.
பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களை வழிநடத்திச் செல்ல மோசேவை தேவன் அழைத்த கதையினால் நான் ஈர்க்கப்பட்டு இந்த ஓவியம் உருவாக்கப்பட்டது. மகா பரிசுத்த தேவனின் குரலைக் கேட்ட மோசே, நடுக்கமுற்றார்.
“அப்பொழுது தேவன்: இங்கே அருகில் வரலாகாது; உன் கால்களில் இருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனைப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.” — யாத்திராகமம் 3:5-6
மோசே இஸ்ரவேலர்களை வழிநடத்தத் தொடங்கியபோது, தேவன் ஆச்சரியமான வழிகளில் அவர்களுக்குத் தரிசனமானார். தனது பரிசுத்தத்தை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களையும் பரிசுத்தமாய் இருக்கும்படி அழைத்தார். இஸ்ரவேலர்கள் தேவனைச் சாதாரணமாக அணுக அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தேவனை அணுகுவதற்கு முன்பு, தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய நீண்ட ஆசாரிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்தது.ஆனால் இயேசுவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஆராதிக்கும் முறை மாறியது. இயேசுவின் தியாக மரணத்தின் மூலம் தேவன் சாதாரண மனிதர்களுக்கும் எட்டக்கூடியவரானார். என்னை அவரோடு ஒப்புரவாக்க இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது சொந்த நீதியை நம்பி என்னால் ஒருபோதும் தேவனை அணுக முடியாது! ஆராதனை முறை மாறியிருக்கலாம், தேவனுடைய கிருபை நம்மைச் சூழ்ந்திருக்கலாம், நாம் தைரியமாக அவருடைய சிங்காசனத்தை அணுகலாம், ஆனால் தேவனுடைய பரிசுத்தம் அப்படியே இருக்கிறது. அவர் இன்றும் பரிசுத்தமானவர். அவர் இன்றும் ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் இருக்கிறார். அவர் இன்றும் மாறாத நீதியுள்ள நியாயாதிபதி.சிலுவை நமக்குத் தைரியத்தைத் தருகிறது, அதன் மூலம் நாம் தேவனை நோக்கி “அப்பா பிதாவே” என்று அழைக்க முடிகிறது. நமது பாவங்களுக்கு மத்தியிலும், மகா பரிசுத்த தேவன் நம்மை நோக்கித் தன் கரங்களை நீட்டுவது ஒரு அற்புதமான காரியம். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவருடைய கிருபையை நாம் ஒருபோதும் மலிவாக எண்ணக்கூடாது. அது இயேசுவின் இரத்தத்தால் வாங்கப்பட்டது. நம்மைச் சிக்க வைக்கும் எல்லாப் பாவங்களையும் நாம் உதறிவிட்டு, பரிசுத்தத்தை வாஞ்சிப்போமாக, ஏனென்றால் நாம் மகா பரிசுத்த தேவனுடைய பிள்ளைகள். நமது சொந்த நீதியை நம்பாமல், இயேசுவின் நீதியை நம்பி அவருடைய சிங்காசனத்தைத் தைரியமாக அணுகுவோமாக.
