தூதுவர்

சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

The Messenger- சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

பரிசுத்த வேதாகமத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை இதுதான். இயேசுவின் கதை முடிந்துவிட்டது என்று தோன்றியபோது, ரோமானிய வீரர்களால் அவரது கல்லறை முத்திரையிடப்பட்டது. அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஒரு சில பெண்கள் அவருடைய உடலில் சுகந்த வர்க்கமிடுவதற்காகச் சென்றார்கள். அந்தப் பெரிய கல்லை எப்படி உருட்டித் தள்ளுவது என்று அவர்களுக்குத் தெரியாது, ஆனால், தங்கள் ஆண்டவர் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு மிகுந்திருந்ததால், நியாயமான கேள்விகள் அவர்களுக்குப் பெரியதாகத் தெரியவில்லை. அவர்கள் விசுவாசத்தோடு அதிகாலையில் அடி எடுத்து வைத்தார்கள்.​இயேசு விட்டுச் சென்ற 11 சீடர்களும் ஒளிந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தப் பெண்கள், தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வெளியே சென்றார்கள். அவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, கல் ஏற்கனவே உருட்டித் தள்ளப்பட்டிருந்தது, கல்லறை திறந்திருந்தது. அங்கே ஒரு தேவதூதர் அவர்களை வரவேற்றார்.​இதற்கு பின்பு மகதலேனா மரியாள், கல்லறையின் தோட்டத்தில் தங்கித் தன் இரட்சகரைத் தேடிக்கொண்டிருந்தாள். அவள் மிகுந்த துக்கத்தில் இருந்தாள், நடப்பவைகளை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் இயேசுவை நேருக்கு நேர் சந்தித்தாள். இது எப்படிச் சாத்தியம்? அவர் சிலுவையில் இருந்து இறக்கப்படுவதையும், துணிகளால் சுற்றப்பட்டு கல்லறையில் வைக்கப்படுவதையும் அவள் பார்த்திருந்தாள்.​அவளுடைய இரட்சகர் உண்மையாகவே மரணத்தை வென்றுவிட்டார். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்ற அவருடைய வார்த்தைகள் இறுதியாக உண்மையாகின. இயேசு, தான் உயிர்த்தெழுந்த செய்தியைச் சீடர்களிடம் கொண்டு செல்லும்படி அவளைப் பணித்தபோது, அவள் அதைச் சரியாகச் செய்து முடித்தாள்! அவள் முடிந்தவரை வேகமாக ஓடிச் சென்று தான் கண்டதை சீடர்களிடம் சொன்னாள்.​இயேசு உயிர்த்தெழுந்ததற்கு முதல் சாட்சியாக அவள் மாறினாள். அந்த நாட்களில் ஒரு பெண் என்பவள் முக்கியத்துவம் இல்லாதவளாகக் கருதப்பட்டாள். அவளுடைய சாட்சி நீதிமன்றங்களில் கூட செல்லுபடியாகாது, அப்படியிருந்தும் இயேசு அவளையே தெரிந்தெடுத்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையில் அவள் உண்மையாக இருந்தாள். தன் உயிர், தன் நற்பெயர் என எல்லாவற்றையும் பணையம் வைத்துச் சாட்சி சொன்னாள், ஏனென்றால் அவள் உயிர்த்தெழுதலைக் கண்டாள்! அது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அவளிடம் இருந்த அனைத்தையும் விட அது மதிப்புமிக்கது.​உயிர்த்தெழுதல் இன்றும் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அதை நாம் அங்கீகரிக்கும்போது, அது நமக்குள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அது மாற்றுகிறதா? இல்லையென்றால், உயிர்த்தெழுதலைப் பற்றிய புதிய வெளிப்பாடு நமக்குத் தேவைப்படலாம்.​

மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள். யோவான் 20:18