சகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ( Jehovah Tsidkenu) ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.
பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்
நான் ஒரு மாதம் ஓவியம் வரையாமல் இருந்த பிறகு, தேவனிடமிருந்து ஒரு செய்தியைப் பெறவும், உந்துதல் அடையவும் வேதாகமத்தைத் திறந்தேன். நான் முதலில் வாசித்த வசனம் ஏசாயா 11:1,”ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிப் பலன் தரும்.” (இது கி.மு. 740 முதல் 701-க்குள் எழுதப்பட்டது). பிறகு, நான் எதேச்சையாகப் பக்கங்களைத் திருப்பியபோது எரேமியா 23:5-6 வசனங்கள் என் கவனத்தை ஈர்த்தன, “இதோ, நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆண்டு, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்… அவருக்கு இடப்படும் நாமம்: ‘கர்த்தர் நமது நீதி’ என்பதே.” (இது கி.மு. 626 முதல் 587-க்குள் எழுதப்பட்டது).இவைகள் இரு வேறு தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட ஒரே மாதிரியான செய்திகள் ஆகும். இதைக் குறித்து நான் தியானித்து, இதை ஓவியமாக வரையத் தீர்மானித்தேன்.

இந்த ஓவியத்தின் தலைப்பு “யெகோவா சித்கேனு”(Jehovah tsidkenu -எபிரேய மொழி)- கர்த்தர் நமது நீதி என்பது, நாம் செய்யும் நற்கிரியைகளோ, தர்மங்களோ, மதச் சடங்குகளோ, உபவாசமோ அல்லது விசேஷ நாட்களைக் கடைப்பிடிப்பதோ நமது நீதி அல்ல. கர்த்தரே நமது நீதி என்று தேவன் கூறுகிறார்.யார் இந்த கர்த்தர்? இந்த கர்த்தர் ஈசாயின் (தாவீது ராஜாவின் தந்தை) அடிமரத்திலிருந்து வந்த ஒரு துளிர். இவர் தாவீதின் ஒரு கிளை. தாவீது இஸ்ரவேலின் மிக முக்கியமான ராஜா, அவர் கி.மு. 1010 முதல் 970 வரை பண்டைய இஸ்ரவேலை ஆண்டார். கி.மு.500 வாக்கில் இஸ்ரவேல் அசீரியர்களாலும் பாபிலோனியர்களாலும் கைப்பற்றப்பட்ட போதிலும், தாவீது ராஜாவின் வம்சாவளியிலிருந்து மேசியாவை எழும்பப்பண்ணுவதாக தேவன் வாக்குறுதி அளித்தார். அந்த மேசியா ஒரு சிங்கத்தைப் போல வராமல், ஒரு பட்டுப்போன மரத்திலிருந்து வரும் சிறிய துளிரைப் போல வருவார். இந்த மேசியாவே நம்முடைய கர்த்தராக இருப்பார்.கர்த்தர் என்றால் எஜமான் அல்லது ராஜா என்று பொருள். இந்த ராஜா நீதியாக ஆட்சி செய்வார். அவரே நமக்கு நீதியாக இருப்பார். தாவீது ராஜாவின் ஆட்சிக்கு 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்தார். அவர் மூலம் நாம் நீதிமான்களாகிறோம். விசுவாசத்தின் மூலம் நாம் அவருடைய நீதியைப் பெறுகிறோம். சிலுவையில் அறையப்பட்ட மேசியாவின் மூலம் கிருபை ஊற்றப்படுகிறது, இது தேவனுடைய பார்வையில் நம்மை நீதிமான்களாக்குகிறது.இந்த நீதியைப் பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்வது பெரும்பாலும் கடினமாக இருக்கலாம், ஆனால் வரலாறு முழுவதும் தேவன் தனது பல்வேறு தீர்க்கதரிசிகள் மூலம் இதே செய்தியை நமக்குக் கொடுத்துள்ளார். இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். விடுதலையோடு வாழுங்கள். நமது கடந்த காலத் தோல்விகள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், கர்த்தரே நமது நீதி. யெகோவா சித்கேனு.
