அளவிடமுடியாதவர்

சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ( *Unsearchable* ) ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்.

பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்

Unsearchable – சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் வரைந்த ஓவியம்

— புத்தகங்கள் — அடுக்கடுக்கான புத்தகங்கள். இந்தியாவில் வளர்ந்த எனக்கு, புத்தகங்களுடனான உறவு மிகவும் குறைவானது. அது மதிப்பெண்களைப் பெறுவதற்கான ஒரு கருவி மட்டுமே. தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக மட்டுமே நான் புத்தகங்களைப் படித்தேன். எனது பள்ளியில் ஒரு சிறிய நூலகம் இருந்தது, ஆனால் அங்கிருந்து புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை. அங்கேயே படித்துவிட்டு, வெளியேறுவதற்கு முன்பு திருப்பித் தந்துவிட வேண்டும். அடுத்தடுத்து வகுப்புகள் இருந்ததாலும், நேரம் இல்லாததாலும் நான் நூலகத்திற்குச் சென்றதே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், பொழுதுபோக்கிற்காக நாவல்கள் வாசிக்கும் பழக்கத்துடன் நான் வளரவில்லை.

​மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றப் பிறகு, அங்கு ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டேன். அங்கு எல்லோரும் எப்போதும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள், பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை எழுத விரும்புகிறார்கள். டிஜிட்டல் புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம், யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகத்தையும் எப்போது வேண்டுமானாலும் பெற முடிகிறது. புத்தக ஆய்வுகள், புத்தகக் கிளப்புகள் மற்றும் புத்தகங்களை மையமாகக் கொண்ட குழுக்கள் அங்கு மிகவும் பொதுவானவை. இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

​இந்த ஓவியம் எரேமியா 33:3-ஆல் ஈர்க்கப்பட்டு வரையப்பட்டது. தேவன் என்னிடம் பேசும் ஒவ்வொரு முறையும், அதில் பல அடுக்குகளும் பரிமாணங்களும் இருப்பதை நான் புரிந்துகொண்டேன். அவருடைய ஞானத்தின் ஆழத்தையும், அவருடைய திட்டங்களையும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையை எண்ணி நான் ஒவ்வொரு முறையும் தாழ்மைப்படுகிறேன். நாம் விரும்பும் அனைத்து புத்தகங்களையும் வாசிக்கலாம். நாம் கற்றுக்கொண்ட அனைத்து கோட்பாடுகள், சூத்திரங்கள் மற்றும் இறையியலைப் பயன்படுத்தலாம்.ஆனால் தேவனுடைய இரகசியங்களைப் புரிந்துகொள்வதில் நாம் இன்னும் குறைவுள்ளவர்களாகவே இருக்கின்றோம்..

​அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் திறன் நமக்கு இல்லையென்றாலும், மறைவான காரியங்களை நமக்கு வெளிப்படுத்த தேவன் விரும்புகிறார். அவர் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், ஒவ்வொரு முறையும் நாம் அவரை விட்டு விலகிச் செல்லும் நேரங்களில், தனது குணம், அழகு, அன்பு மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்த அவர் முன்வருகிறார். என் வாழ்க்கையில் பலமுறை தேவன் மறைவான காரியங்களை முன்னெச்சரிக்கையாகவும், எதிர்காலப் பாதையாகவும் அல்லது என் அரைகுறையான அறிவிற்கு புரியும்படி  வெளிப்படுத்தியுள்ளார். அவர் பலமுறை வழக்கத்திற்கு மாறான வழிகளில் காரியங்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்பது எனக்கு இன்னும் ஒரு ஆச்சரியமாகவே இருக்கிறது.

​எரேமியா 33:3 என்பது விழுந்துபோன மனிதகுலத்திற்கான ஒரு வாக்குறுதியும் நம்பிக்கையுமாகும்: நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது, நமக்கு மறைக்கப்பட்ட காரியங்களை அவர் வெளிப்படுத்துகின்றார். புத்தகங்களிலோ அல்லது மிகக் கவனமாக எழுதப்பட்ட கொள்கைகளிலோ தேடி அடைய முடியாத, எட்டாத காரியங்களை தேவன் நமக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலும் வெளிப்படுத்தவும் செய்கிறார். அவர் யார் என்பதை நாம் புரிந்து கொள்ளவும், அவருடைய நாமத்தின் மகிமைக்காகவும் அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துகிறார். தீர்க்கதரிசனங்கள் கொடுக்கப்படும்போது, அது அவருடைய இரக்கத்தினாலும் முடிவில்லாத கிருபையினாலும் நிகழ்கிறது. “தீர்க்கதரிசனத் தூதுவர்கள்” என்று தங்களைச் சொல்லிக்கொண்ட சிலரால் நாம் ஏமாற்றப்பட்டிருக்கலாம், ஆனால் தேவன் இன்னும் சாதாரண மக்களிடம் கற்பனை செய்ய முடியாத வழிகளில் தலையிடுகிறார் என்பது உண்மை.

​அவரை நோக்கிக் கூப்பிடுங்கள், அவர் பெரியதும் எட்டாததுமான பெரிய காரியங்களை வெளிப்படுத்துவார். அவர் தனது நாமத்திற்காகவே அதைச் செய்வார். தெய்வீக வெளிப்பாடுகள் கிடைத்தாலும், நம்மால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம், அது பரவாயில்லை. அவருக்கு எல்லாம் புரியும்.

*”என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு மறுஉத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.” — எரேமியா 33:3*